Friday, September 22, 2017

துணையைத் தேடி...

நிழல் போல் தொடர்வேன் என்றால் நகைக்கத் தோன்றுகிறது

பகலில் காலைத் தழுவி இரவில் விட்டோடும்
நிழல் நீண்ட நாள் துணையா?
வெளிச்சத்திலா விளக்கை கேட்டேன்?
காரிருளில் தானே கரம் நீட்ட சொன்னேன்?

என்னோடே இரு. என் ஆவியில் கலந்திரு.
என்னை சுற்றி இருக்கும் காற்றில் கரைந்திரு.
என் இயக்கத்தில் ஒன்றாய் சேர்ந்திரு.
ஏக்கத்தில் உள்வாங்கும் பெருமூச்சில் ஒளிந்திரு.

அதிர்ச்சியில் நான் மறந்த சுவாசமாய் நீ இரு.
மரணத் தருவாயில் மீண்டும் ஒரு முறை கூட இரு.
மாய்ந்து மண்ணோடு நான் போகும் போது 
உன் மூச்சில் என்னை உள்வாங்கி கொள். 

நிழலாய் நீ வேண்டாம். நிஜமாய் என்னோடிரு.

Tuesday, September 12, 2017

பழகாத புதிர்கள்

இருள் பழகி விட்டால் ஒளி எதற்கு?
மௌனம் பழகி விட்டால் மொழி எதற்கு?
பசி பழகி விட்டால் புசிக்க உணவெதற்கு?
தாகம் பழகி விட்டால் தண்ணீர் எதற்கு?
எளிமை பழகி விட்டால் வளமை எதற்கு?
தனிமை பழகி விட்டால் துணை எதற்கு?
பழகினால் புரியாதது இல்லை
உறவுகளைத்  தவிர.