Tuesday, May 19, 2009

எங்கே இருக்கிறாய் என் தோழி?

இன்று காலை, எல்லா செய்தி சானல்களிலும் ஒரே செய்தி ஒளி பரப்பாகிறது. பிரபாகரன் மரணம். சில வீடியோக்கள் இடைவிடாமல் காட்டப்படுகின்றன - இலங்கை ராணுவத்தின் விமான படையால் தாக்குண்டுப்பட்ட விடுதலைப் புலிகளின் கடைசி மறைவிடம், ராணுவ உடையில் பிரபாகரன், அவர் திருமணம், மனைவி மக்களுடன் ஆனந்தமாய் பொழுதைக் கழிப்பது, ஊதப்பட்ட ஒரு பெரிய பொம்மையுடன் விளையாடும் மகன், 2002-ல் நடத்தப்பட்ட அமைதி பேச்சு வார்த்தைகள், வெளி நாட்டு பயணத்திலிருந்து திரும்பி வந்த இலங்கை ஜனாதிபதி மகிந்தா ராஜபக்சே தனது தாய்நாட்டு மண்ணை முத்தமிடுவது, இன்றைய நிலைமையைப் பற்றி வெவ்வேறு வல்லுனர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பது, வெற்றி ஆரவாரத்தில் ஆனந்த களிப்பில் கொடிகளை ஆட்டும் மக்கள் - இவை அனைத்திற்கும் இடையே என் மனதில் ஒரே ஒரு கேள்விக்குறி. கீதாஞ்சலி, எங்கே இருக்கிறாய் என் தோழி?

1983. நான் ஏழாம் வகுப்பு மாணவி. இலங்கையில் தமிழர் பிரச்சினை அப்பொழுது தான் பெருமளவில் வெடித்திருந்தது. ஆங்கிலத்தில் ஒரு வார்த்தையை அப்பொழுது தான் முதன்முறையாய் கேள்விப்பட்டிருந்தேன். A-G-I-T-A-T-I-O-N. என்னை பொறுத்த வரையில், அதன் அர்த்தம் - அனைத்து அரசு பள்ளிகளுக்கும் ஒரு மாத விடுமுறை. பள்ளிக்கூடம் இல்லை. பள்ளி சீருடை இல்லை. காலை 8.20 மணிக்கோ, மாலை 5 மணிக்கோ பேருந்தை பிடிக்க வேண்டியதில்லை. வீட்டு பாடம் இல்லை. எல்லாவற்றையும் விட அதி மகிழ்ச்சியானது, அரக்கியான எனது வகுப்பு ஆசிரியை பாப்டிஸ்டாவை பார்க்க வேண்டியதில்லை. அவ்வார்த்தையின் அர்த்தமே வேறு. நண்பர்களோடு காலனியில் K பிளாக் கார் ஷெட்டில் நாள் முழுவதும் சீட்டாட்டம், கண்ணாமூச்சி, I Spy, டப்பா, ஏழு கற்கள் - இவற்றை ஆடி களிப்பது, களைப்பது. தமிழ் நாட்டுக்ககரையில் அலையாய் மோதி வந்து இறங்கும் அகதிகள், மண்டபத்தில் திறக்கப்படும் முகாம்கள், குட்டிமணி, ஜகன், தங்கதுரையின் வீர சாகசங்கள், இலங்கை ராணுவத்தின் கையில் அவர்கள் அனுபவித்த கொடுமைகள், அமிர்தலிங்கம், பிரபாகரன், பத்மநாபா, TULF, LTTE - செய்தி தாளில் வெறும் வார்த்தைகள். 3 வருடங்களுக்கு முன்னர் அன்றாட செய்திகளைப் படிப்பது வாடிக்கை ஆயிற்று. கடினமான வார்த்தைகளை குறித்து கொண்டு Oxford அகராதியில் படிப்பது வழக்கமாயிற்று. போராட்டம், அகதி, சிறுபான்மை இனத்தவர் - இவை எல்லாம் வெறும் வார்த்தைகளாகவே இருந்தன. எல்லாமே மாறவிருந்தன - வெகு விரைவில்.

1984-ல் எப்போதோ என் பள்ளிக்கு வந்தவள் கீதாஞ்சலி மாணிக்கவாசகம். என்னை விட உயரம், சற்றே நிறம் குறைவு, நீண்ட முகத்தில் வெடித்த சில பருக்கள், எப்போதும் இனிய புன்சிரிப்பு, கட்டுக்கடங்காத சுருள் முடி இரட்டை வால் குதிரையில் அடக்கம், அவள் குழந்தை இல்லை - வாலிப பருவத்தின் வளைவுகளை காட்டும் இளம்பெண். அவள் பேசுவதே வேறு விதமாய் இருந்தது, எப்பொழுதும் மரியாதை, இனியதாய் குரல் மற்றும் ஆம், இலங்கை தமிழருக்கே உரிய அரிதான பேச்சு நடை. பள்ளிக்கூடத்திலிருந்து பத்து வீடுகளுக்கு அப்பால் அவள் வீடு. முதல் மாடியில், அம்மா, அப்பா, 3 உடன் பிறந்தவருடன் வாசம். ஷங்கர், சுதா (அவன் பெயர் சுதாகர் என்று நினைக்கிறேன், ஆனால் அவனை அவள் அப்படிதான் அழைப்பதுண்டு) மற்றும் இளம் குழந்தை பிபாஷினி. தம்பிமார்கள் படித்தது அருகில் இருந்த சாந்தோம் மேனிலை பள்ளியில். பிள்ளைகள் மீது எப்பொழுதும் கருத்தாய், அவர்கள் தேவைகளைப்பூர்த்தி செய்தவாறு, குழந்தையைக்கூட மரியாதையுடன், "பிபா, இங்க வாங்க," என்று அழைத்த அன்பான அம்மா. ஆட்டோக்காரனால் "வூட்ல சொல்லிட்டு வந்துட்டியா?" என்று மட்டுமே கேட்டு பழக்கபட்டிருந்த மெட்ராஸ் வாசியான எனக்கு இன்ப அதிர்ச்சி.

கீதா, கீது என்று செல்ல பெயர் ஏதுமின்றி, வெறும் கீதாஞ்சலி என்று மட்டுமே அழைக்கப்பட்ட அவள் வெகு சுட்டி. படிப்பில், வகுப்பில் முதல் 10 மாணவிகளில் அவளும் ஒருத்தி. அற்புதமாய் வரைவாள் - கஸ்துரி ரங்கா சாலையில் இருந்த சோவியட் கல்சுரல் சென்டெரில் ஓவிய பாடங்களுக்கு ஒன்றாய் செல்வோம். அந்த பாடங்களுக்கு போகுமுன்னர், அவள் வீட்டிற்கு சென்று பிபாவுடன் விளையாடி, சாலை முனையில் இருந்த பேக்கரி-இல் பிரட்-உம் ஜாம்-உம் தின்று, 27D பேருந்தில் செல்வதுண்டு. என் வீட்டிற்கு தனியே திரும்பி செல்வேன். விளையாட்டுகளிலும் அவள் தேர்ச்சி அடைந்தவள். ஓட்ட பந்தயத்தில் வேகம், கூடை பந்தும் தெரியும், ஜாவேலின்- லாவகமாய் வீசுவாள். அனைவரிடமும் இனிதாய் பழகினாள். பாப்டிஸ்டா டீச்சரையும் மயக்கி வைத்திருந்தாள். அவளைக்கண்டு நான் என்றுமே பொறாமைப்பட்டதில்லை. அவள் நட்பில் சந்தோசம் மட்டுமே கண்டேன். கொஞ்சம் பெருமிதமும் அதில் கலந்து இருந்தது.

அவளைப்பற்றி பற்றி இப்பொழுது எதுவுமே குறிப்பாக நினைவிற்கு வருவதில்லை. அவளைப்பற்றி நினைத்தாலோ, ஓர் இனிய உணர்வே அலை மோதுகிறது. சொல்லொண்ணா துயர நிலையில் அவள் குடும்பம் இருந்திருக்கலாம். ஆனால், நான் எப்பொழுதும் கண்டது - சந்தோசம் மற்றும் ஒற்றுமை. அவள் அப்பாவை ஒன்றிரண்டு முறை கண்டதுண்டு - பேசியதே இல்லை. நான் 9-ஆம் வகுப்பிற்கு சென்றேன். அவள் அடையாளமே தெரியவில்லை. பள்ளிக்கூடம் வருவதை நிறுத்தி விட்டாள். அவள் வீட்டிற்கு சென்றேன். காலி செய்து சென்று விட்டிருந்தனர். லண்டனுக்கு சென்று விட்டதாய் கேள்விப்பட்டேன். பாப்டிஸ்டா டீச்சருக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தாள். எல்லா தோழிகளிப்பற்றியும் விசாரித்து எழுதி இருந்தாள் - என்னையும் சேர்த்து. அந்த கடிதத்தை நான் பார்க்கவே இல்லை. டீச்சர் அதை காட்டவே இல்லை - அவரிடமே வைத்துக்கொண்டார். ஒரு வேளை கேட்டிருக்கலாமோ? எடுத்து கொண்டு இருக்கலாமோ? அவள் விலாசமாவது தெரிந்திருக்க கூடும். அதன் பிறகு, அவளிடமிருந்து தகவலே இல்லை. வெறும் நினைவாகவே மறைந்து விட்டாள்.

பள்ளி நாட்களிலிருந்து புகைப்படங்கள் என்னடிம் வெகுவாக இல்லை. ஆனால், ஒன்று உள்ளது. பாப்டிஸ்டா டீச்சருடன் கீதாஞ்சலி, பார்கவி, சுதா மற்றும் நான். Google-இல் புகைப்படத்தைப்போட்டு தேடும் வசதி இருந்து, அது தானாகவே இருபத்தி ஐந்து வயதைக்கூட்டி, அவளைக்கண்டுப்பிடித்து தந்தால் நன்றாக இருக்குமே என்று நினைப்பதுண்டு. அவளைக்கண்டுப்பிடிக்க பல வருடங்கள் முயன்றதுண்டு. 1995-6 இல், முதன்முதலாய் இன்டர்நெட்- உபயோகித்த போது, அவள் பெயரை Yahooவில் தேடியதுண்டு. அதுவே வழக்கமாயிற்று. ஒவ்வுறு வருடமும் அவளைப்பற்றி எனக்கு ஞாபகமிருந்த சின்னச்சின்ன விவரங்களை வைத்து, வெவ்வேறு ஸ்பெல்லிங்-களை வைத்து தேடுவதுண்டு. அவள் பிறந்த ஊர் Batticaloa - அவள் அதைச் சொன்ன விதம் மட்டக்களப்பு. 2002-இல் Google- உபயோகித்து அவளுக்கு முன்னமே அறிந்து இருந்த, பழக்கம் விட்டு இருந்த இரண்டு நண்பர்களான ராஜு மற்றும் பைரவ்- கண்டு பிடித்து தொடர்பு கொண்டேன். நெஞ்சில் சின்னதாய் நம்பிக்கை அரும்பு விட்டது. கடந்த ஏழு வருடங்களாய் என் தேடல் தொடர்கிறது. அவளை இன்னமும் கண்டு பிடிக்கவில்லை.

அமெரிக்காவிலிருந்து லண்டன் வழியாக தாயகம் திரும்பும்போது, விமானத்தில் என் அருகில் உட்கார்ந்திருந்த ஓர் இலங்கைத் தமிழ் பெண்ணிடம் கீதாஞ்லியைப் பற்றி விசாரித்தேன். லண்டனில் இருக்கும் ஒவ்வொரு இலங்கைத் தமிழருக்கும் மற்றவரைத் தெரியக்கூடும் என்ற அல்ப ஆசை எனக்கு. 2005-இல் கொழும்புவிற்கு இரண்டு முறை சென்ற போது, அவளை நினைத்துக் கொண்டேன். இது அவள் தாய்நாடு. ஆனால் அவள் இங்கே இல்லை. இலங்கையைப் பற்றியோ, யாழ்ப்பாணத்தைப் பற்றியோ யார் பேசினாலும், அவளைப் பற்றி அமைதியாக நினைப்பேன். தொலைக்காட்சிகளில் தப்பி ஓடும் இலங்கை அகதிகளைக் காட்டும் போது, அவள் அங்கே இல்லை என்று சந்தோஷப் படுவேன். என்னுடன் வயலின் வாசிக்கக் கற்றுக்கொள்ளும் கிருஷாந்தி யாழ்ப்பாண தமிழ் பெண். மட்டகளப்பிலிருந்து இல்லை என்றாலும், கீதாஞ்சலியை பற்றி ஒரு முறை பேசி இருக்கிறேன். ஆனால், அவள் எங்கே இருக்கிறாள்?


எங்கே இருக்கிறாய் கீதாஞ்சலி? நலம் தானே? திருமணம் ஆகி விட்டதா? குழந்தைகள் இருக்கின்றனவா? தாயகத்தை எப்போதாவது திரும்பி சென்று கண்டதுண்டா? பிரிட்டிஷ் மக்களைப் போல் ஆங்கிலம் பேசுகிறாயா? உனக்கே உண்டான அந்த இனிய யாழ்ப்பாண தமிழில் இன்னமும் பேசுகிறாயா? பிபா எப்படி இருக்கிறாள்? வளர்ந்து பெரியவளாகி இப்போது கண் கவிரும் கன்னிகை ஆகி இருப்பாள். அம்மா எப்படி இருக்கிறார்கள்? அப்பா? தனது குடும்பத்தை இரண்டு முறை வேரோடு அறுத்து கண் காணா தூரத்திற்கு கூட்டி சென்ற அந்த விவேகமான அப்பா எப்படி இருக்கிறார்கள் - வேலையில்
இருந்து ஓய்வு பெற்று, இலங்கையில் காணா அமைதியை வேற்று நாட்டில் அனுபவித்து கொண்டுஇருக்கிறாரா? ஷங்கரும் சுதாவும் இப்பொழுது வாலிப முறுக்கில் இளம்பெண்களைகவர்ந்து இழுத்து கொண்டு இருப்பார்கள். என்ன தொழில் செய்து கொண்டுஇருக்கிறார்கள்?

இன்டர்நெட் உலகின் ஏதோ ஒரு மூலையில் இதைப் படித்தால், திரும்பி வந்து உன் தோழிக்கு ஹலோ சொல்வாயா? எனக்கு தெரிந்த, எனக்கு தனிப்பட்ட முறையில் நான் கவலைப்படும் யாழ்ப்பாண தமிழர் நீ மட்டுமே. உனக்காக, ரணமான உன் நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்று வேண்டுகிறேன். நீ அங்கே திரும்பி சென்றாலும் சரி, செல்லா விட்டாலும் சரி, நீ விட்டு சென்ற உன் நாட்டு மக்கள் நம்பிக்கை என்ற காற்றை சுவாசிக்க வேண்டும், நல்ல எதிர்காலத்திற்கான கனவைக் காண வேண்டும். நொடிந்து போன தம் வாழ்க்கைகளை மீண்டும் சரி செய்து அமைதியின் பாதையை அடைய வேண்டும். சிறு பிள்ளைகள் துள்ளிக் குதித்து பள்ளிக்கூடம் போக வேண்டும். ஆடவரும் பெண்டிரும் தத்தம் வேலையில் மும்முரம் அடையவேண்டும். வீட்டு முற்றத்தில் வயதானோர் எல்லாம் இப்போர், தூக்கத்தில் கண்ட ஒருபயங்கர கனவே, சீக்கிரம் மறந்து விடும் என்று நினைக்க வேண்டும். நீயும் உன் நாடும்நன்றாக இருக்க வேண்டும் - நீ எங்கே இருந்தாலும்!

1 comment:

  1. காலங்கள் உருண்டோடினாலும், இன்னும் உங்கள் கண்கள் தோழியைத் தேடுவதை நினைக்கையில், உங்களின் நட்பின் ஆழம் புரிகிறது. அத்தோழியோடு நட்பு கிட்டிட வேண்டுகிறேன். இப்பதிவை நீங்கள் பதிவிட்டபோது, நிச்சயம் கீதாஞ்சலிக்கு புரையேறிருக்கும்.

    ReplyDelete